பாரதியே மீண்டும் வா . . .
பாரதியே ...!
நீ
ரௌத்திரம் பழகென்றாய்
நெஞ்சம் புடைத்து
நேர்பட பேசென்றாய்
மூச்சு விடவே
முணங்கும் நாட்டில்
பேச்சுரிமைக்கு எங்கே போவோம்
எங்கள் தலைமுறையும்
எங்ஙனம் வாழும்
வந்துவிடு பாரதியே
ரௌத்திரம் பழகி
தந்துவிடு பாரதியே
அந்நியர் ஆண்ட பூமியிலும்
அனல் வார்த்தை வீசியே
வலம் வந்தாய்
இன்று
நம்மவர் ஆளும் போதினிலும்
நலம் கோரும் வார்த்தையே
தீதென்றார்
நெஞ்சம் புடைத்து
நேர்பட பேச
பாரதியே நீ வேண்டும் - எமக்கும்
ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும்
விந்தை உலகத்தில்
சந்தைப் பொருளாகிப்போன
பழம் பெரும் பண்ணாடு - இது
பாழாகும் திருநாடு
நெஞ்சம் புடைத்து
நேர்பட பேச
பாரதியே நீ வேண்டும் - எமக்கும்
ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும்
இது கலவரப் பூமியில்லை
கார்பன் வாய்வால் வந்த தொல்லை
எங்கள் கழனியும்
கருகும் நிலை
அதுவே கர்ப்பமும்
கலைக்கும் உலை
இது அணுவுலை களம்
ஒரு அவசர யுகம்
இதில்
சமைத்துண்ண நெகிழியும்
சதை வேக மின்களனும்
எளிமையிலோர் புதுமையாம்!
இது புதியாதோர் மடமையாம் !!
நெஞ்சம் புடைத்து
நேர்பட பேச
பாரதியே நீ வேண்டும் - எமக்கும்
ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும்
நம்மில்
சடுதியில் பூப்பும்
சதை தொங்கும் மடிப்பும்
தலைமுறை புலம்பலும்
தலைவனின் புகழ்விலும்
தரிகெட்டோடும்
தரணியில் நல்ல தமிழகம்
இது
சடுதியில் மாய்ந்திடும்,
பெரும் சதியால்
மடிந்திடும்
அதிலும்
ஓர் நடைமுறை வருத்தம்
செய்தவன் உற்றவனெனில்
குற்றமே யாயினும்
செயலதும் செம்மையாம்
நல்லதோர் திட்டம் . . .
அதை மாற்றான் கொண்டால்
அது கேடினும் கேடாம்
இதுதான் சதுரங் அரசியல்
இது நன்மை கண்டுவிலகும் !
நல்தீமைக்கு துணைபோகும் !!
இது பாழ்பட்ட அரசியல்
அதில் பாதகர் மக்களோ
கொடும் கோலோச்சும்
கோமாக்களோ
நெஞ்சம் புடைத்து
நேர்பட பேச
பாரதியே நீ வேண்டும் - எமக்கும்
ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும்
சோமபானமும்
சோர்வு நிலையிலும்
சோம்பிக்கிடக்குது தமிழகம்
அது சோம்பல் முறித்து
எழ வேண்டும்
மக்கள் புரட்சி
வெடிக்கும் நிலை
வேண்டும்
அதற்கோர்
புது கவிதை வேண்டும்
பாரதியே
மீண்டும் நீ வேண்டும்
நெஞ்சம் புடைத்து
நேர்பட பேச
பாரதியே நீ வேண்டும்
செருவாவிடுதி :
சி.செ
11/12/2017
மீள் பதிவு
Comments
Post a Comment