பருவம் கடத்தும் வறுமை
பெண்
கால்சதங்கை யோசையில்
கண் மயங்கும் கதிரவன்
மண்குடத்தோடு நாணம்
நடைபோட்டு நானும்
முப்பதைக் கடந்துமென்னில்
முல்லை வாசமும்
முன்நெற்றிக் குங்குமமும்
ஏதோர் மார்பில்
ஏந்திட ஆளில்லை . . .
நல்லோர் நாளில்லை . . .
தாமரைக் குளத்தில்
தாவணிச் சேலையில்
தண்ணீர் தீண்டாமல் ஏந்தினாள் . . .
தாழை முழங்கால் மட்டம் நனைந்திட
இலைகளின் இடையில் மெல்ல
அலைமோதி
குடத்தில்,
தெளிந்த நீரெடுத்து
மெல்லிய இடையெனும்
மேனியில் வைத்து
குளத்தோடு,
சொல்லாமல் கொள்ளாமல்
நகர்ந்தாள் நங்கை
நீருக்குள்
காத்திருந்த கரியஉரு
காலை வருடி
சோலையிவளை
வசமாக பிடித்திட
திடுக்கிட்டவள்
சட்டென மயங்கி
பட்டென விழுந்தாள்
வாய்ச்சொல் ஓசையின்றி
ஓராயிரம் ஆசையில்
பெரும் போரட்டத்தோடுமொரு
பேடை மனத்தோடும்
இதை
கொடுமை என்றே கொட்டுவதோ
கொலைக்குற்றமென்றே கத்துவதோ
நங்கை
கக்கத்தில்
வைத்த குடம் கொட்ட
கொட்டிய நீரில்
சித்திரம் இவளானாள்
காரிருளும் கருணையின்றி
முன்னேறி
அங்கத்தில் ஒரு கை
ஆடை முடிப்பிலும் மறு கை
ஆங்காங்கே பலமுறை
தொட்டது மட்டும்
கொட்டாமல் நீங்கிச் சென்றான்
கெட்டவன்
மிச்சத்தில்
நெடுநேரம் கடந்தும்
இன்னும் எழாமல்
கிடந்தாள்
ஒன்றும்
பறிபோகவில்லை . . .
எனினும்!
விலையற்ற ஏதோ ஒன்று
கை விட்டு போனது போல்!!
செருவாவிடுதி :
சி.செ
Comments
Post a Comment