பிரிவையுணர்த்திய முதல் பயணம்

காய்கறி கடையில்
காய் பார்த்து வாங்கியதைவிட

கரிசம் காட்டினாய்
அதை நறுக்குவதில்

கோழிக்குருமா
குரும்பாட்டுக் குழம்பு
நாக்கு சொட்டாங்கிப் போடும்

தாயே
போதுமென்றாலும்
விடுவதில்லை நீ

நல்லா சாப்பிடுப்பா
இன்னும் ஒருவருடமோ
ரெண்டு வருடமோ. . . என்றவள்

குழம்பு கலக்குவதிலேயே
மெய் மறப்பாள்

வேதனையோடு 
முகந்துடைப்பாள்

கேட்டதும் 
அடுத்த கவளம் அன்னம்
 உள்ளிறங்க மறுக்கும்

தொண்டையில்
வலிக்கவே நிற்கும்

அன்றையப் பொழுது
ஒவ்வொரு வீடாகப் பயணம்
சொல்லும் படலமாக

என் பிள்ளைகளோடு 
சிறு பிள்ளைபோல்
நானும் குதூகலத்துடன்

வீட்டுக்கு வீடு தண்ணீர்
உண்ணும் உணவிலும்
ஒருபிடியன்னம்

விபூதியோடு கைப்பணமும்
கண்ணீரோடு பயணப்படுத்துவார்

பிரிய மனமின்றி
சிரிப்பதா அழுவதா என்று
தெரியாமலே பரிதவித்தேன்

அன்று அதிகாலை
4.30 மணி
விமான நிலையம்
புதுமையிலும் புதுமை
எனக்கது புது அனுபவம்

குளு குளு அறையும்
அரைகுறை தெளிவும் பார்வைக்கழகோ அழகு

வீட்டு நினைவுகள்
மெல்ல மறக்க நினைத்தாலும்

பிறைபோல் அது
வளர்வதும் தேய்வதுமே
வனப்பாயிருக்கும்

பேசத் தொரியாதவனை
மூடு வாயையென்றதும்

சிலபல நேரங்களில்
ஓர் மூளையில் நின்று
என்னைப் பார்த்து 
ஏளனம் செய்யுமென்  
மனசாட்சியும்

அருகதை இல்லாதாரிடமும்
அயர்ந்து பேச பயம்

அனாதையோ,
என்றொரு வினோத உணர்வு

திக்கு வாய்போல் 
திக்கித் திணறி பேசக்கற்றேன்

எதிராளியும் தெறிப்பது 
களிப்பை தந்தது

வீட்டு ஞாபகம்
மெல்லவே கதவுதட்டு 

சொல்லாமல்தான் எட்டிப் பார்க்கும்
இரண்டு மூன்று
கண்ணீர் துளி 

தங்கையின் கல்யாணம்
தகவல் மட்டும் 
தவணைமுறையில் வந்துசேரும்

என் தலைவருடும் 
சேதியுரைப்பார்கள்
அப்பா 
அம்மா
தம்பி
மனைவி
பிள்ளை
பின் அவளும்

அண்ணா "
முதலில் வெட்கம் தெரிகிறது
அவள் குரலில்

வெண்மேகமும்
மெல்ல கார்மேகமாய்
அது  உருமாறுகிறது

தொலைபேசி இணைப்பும்
துண்டித்து துண்டித்து 
வருவதுபோல் ஒரு தோன்றல்

இல்லை
அவள் அழத்தொடங்கியதால்
வார்த்தைகள் உடைந்து போனதுதான் தொல்லையென்றது
வீசும் தென்றல்

ஆறுதல் சொன்னேன் . . .
சொல்லாமல் நிற்க, 
நானென்ன கடவுளா
கல்லாய் நிற்பதற்கு

அழாதேம்மா
இன்னும் ஒரு வருடம்தான்
அண்ணன் ஓடோடி வந்துவிடுவேன்

வந்ததும் 
ஊர்கூட்டி

உம் பிள்ளைக்கு 
தாய் மாமன்
எம்மடியில வச்சி காது குத்தி.  . .

அண்ணா . .  .
அண்ணா.  .  .என்றாள்
அழுதுகொண்டே

ஓலமிடுமொரு சிறகொடிந்த
குயிலைப்போல்

என்னனு கேட்கவோ
இருக்கிறேன் என்று சொல்லவோ
வாய்வரவில்லை

வெறும் உப்புக்கரிசல் மட்டும்
பாழாய்ப்போன கண்ணீர்
எத்தனை துடைத்தும் நிற்கவில்லை

உறைந்தேபோனேன் உயிரோடு
தொலைபேசி துண்டிப்பும்
அறிந்தேனில்லை.  . .

சில நேரம் 
கைபேசியின் அலறலே
என்னை கலங்கடிக்கும்

எதைச் சொல்ல
அன்பு மகள்
தும்மினாலே துடிக்கும் நான்,

இன்று
காய்ச்சலில் உடல் நடுங்கும்
என்மகளை அரவணைக்க
வழியில்லையே.  . .
என்ன செய்ய. . .

இருள் சூழ்ந்த இதயத்துடன்
இமைக்குள் ஒளிபடர்ந்தது

அதிகாலை, 
முற்றத்தில் நீர்தெளித்து
கோலமிடுவாள்

கோலத்தில் 
குறைசொல்ல
குறைவேயிறாது

எவ்வளவு வேண்டுமாயினும்
சொல்லலாம்

ஆனால்,
அவள் ஊடுபுள்ளி வைத்ததில்
நான் முற்றுப்புள்ளி வைப்பதா ? 

வேண்டாம் . .  .

வானவில்
வரிக்குதிரை
தாமரையும்
தளிர்கொடியும்
கோலமயில் ஆடும்
அழகோவியம் என்பேன்

எவ்வளவு இயலுமோ
அவ்வளவு புகழ்வேன்

இன்று
விழிகள் இருக்கு
விடையில்லை

அவள் கால்பதித்தாடிய
நெஞ்சுக்குழி மட்டும்

அப்பா . . . 
அப்பா என்கிறது
சத்தமில்லா சலனத்தில்

மகளே .  . .
நீ கருவிருந்தக் காலத்தில்

காத்திருந்தேன்
காதோர்த்து பத்துமாசம்

அதே நிலையில்
நீ அழுதிருப்பாயோ விழிபூத்து
நான் வருவேனென்றே வழிபார்த்து

காத்திரு மகளே
காத்திரு.  . .

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

ஒரு சம்மதம் சொல்வாயா . . .