மீண்டும் வசந்தம் தீண்டுமா . . .
வெளிநாட்டுக் கணவனே
உள்ளம் தித்திக்க
இனிமைபேசும் என்னவனே
எப்போது வருவாய்?
என்று ஒருபோதும் கேட்டதில்லை
அதைச்சொல்ல மனமிருந்தால்
நீயே சொல்
நான் வருந்துவேனில்லை
என்னுயிரானவனே . . .
அதிகாலையில்
வாசல் கூட்டி
முற்றத்தில் கோலமிட்டு
தலைகுளித்து
கோவில் மாடம் தொழுது
இருகண்ணில் ஒற்றிக்கொள்வேன்
நீ கட்டியத் தாலிக்கொடியை
ஒருபோதும் சலித்துக் கொண்டதில்லை
என்னை நான்,
அன்றுன் கால்தொட்டு வணங்கியபோது
முத்தங்களோடு ஆசிர்வதித்தாய்
இன்றென் நினைவுகளும்
பறக்கின்றது உன்
முத்தத்திற்காக
நித்திரைக்குக் கூட
என் மீது வெறுப்பு
உன் நினைப்பு
அதற்குத் திரையிட்டிருப்பதால்
எத்தனை நாளடா நான்
தலையணைக்கே முத்தம் வைப்பது
என்னவனே. . .
எப்போதையும் விட
அன்றழகாகத் தெரிவாய்
வழக்கத்துக்கு மாறாக - மெல்லிய
புன்னகையும் புரிவாய்
இரவு
உணவு பரிமாறலும்
விக்கலுக்குடனே தண்ணீரும்
படுக்கையும் நீயே விரிப்பாய்
அதை பார்த்துப் பார்த்து
வெட்கத்தில் பூரிப்பேன்
பங்குனியானாலும்
சித்திரை என்றாலும்
மின்னல்
என்னுள்ளேயும் ஓடும்
சிலநேரம்
பகலில் பக்குவமாய் பேசுவாய்
அச்சாரம் என்பதும் புரியும்
அதை அறியாத பேதையாய்
நானும்
உறங்குவதாய்
பாவனை செய்து
சில வார்த்தைகளுக்குப்
பதில் இல்லாமல் போகவே
நெத்தி வருடி
வியர்வை துடைத்து
ஆடை சரிசெய்து விடுவாய்
அது உனக்கு நான்
ஒதுக்கி வைத்ததெனத் தெரியாமல்
நேரம் கடத்தாமல்
என் விழிரெண்டும் துடிக்கும்
ஓரக்கண் பார்வையில்
அதையும் எப்படி பார்த்தாயோ
அப்பப்பா எம்பாடு
கொண்டாட்டம் தான்
இன்று அந்த நினைவுகளே
என்னைத் திண்டாட வைக்கும்
உண்ணத்தொடங்குவேன் எப்போதாவது விக்கல் வரும்
கூடவே கண்ணீரும் வரும்
அந்த நினைவே
கூடாதென்று எண்ணமிடுவேன்
அது கண்களுக்குத் தெரியாதே
பணம் அனுப்புவீர்
பாசம் அலைபேசியில் மட்டும்
பத்து வார்த்தைக்கொருமுறை
சாப்பிட்டாயா என்பது
பசியின்
வாடை வீசும்போது வரும்
அனிச்சை செயல் நம் இருவருக்கும்
மாதம் ஒருமுறை தலைகுளிப்பு
இருநாள் முந்தினாலும்
பத்துநாள் பிந்தினாலும்
இன்னுமா ?
அது எப்படி ?
என்ற கேள்விகள்
பழுக்கக் காய்ச்சிய கம்பிகள்
என் கண்ணீரே
பதிலாயிரும்
காலக்கேள்விக்கு
பச்சை வாழையும்
தண்ணியும் எரியவைத்ததெல்லாம்
புராணகாலத்து
பொய்யுரைகள்
என் ஜீவனே
சிறை பட்ட சீதையாய்
மனம் வதைபட்டுத் தவிக்கின்றேன்
நீயும்
தீயிறக்கி சோதிப்பாயா
உன் தளிர்க்கரம் நீட்டி
சுடும் கண்ணீரைத் துடைப்பாயா
என்னவனே
எது உன் பதில்
நான் எப்போதும்
உன் பத்தினிதான்
செருவாவிடுதி :
சி.செ
Comments
Post a Comment