யாரையும் மதித்து வாழ்
உலகத்தில் உயிர்கள்
இயற்கையின் படைப்பு!
அதில் ஆற்றலென்பது
இலவச இணைப்பு!
பலம் கொண்டவன் மட்டும்தான்
பயன்கொள்ள வேண்டுமெனில்
பல்லுயிர் வாழும் பிரபஞ்சமெதற்கு
ஒன்றை அடித்து
மற்றொன்று வாழும்
மிருக குணத்தின் மீட்சியா மனிதன்
இல்லை!
பண்பை விதைத்து
பகையில்லாது வாழும்
பசுந்தளிர் நெஞ்சமுடையோன் மனிதன்
மனிதம்
நேயம் போற்றும் நேசன்
பலதும் அறிந்துணரும் ஆற்றல்
எதையும் ஆழ்ந்து நோக்கும் பற்று
சிலநேரம் அறிவீனம் - அது
சிந்தையின் குறையா? - இல்லை
சாதியம் சிறைபட்ட அறையா
ஏனிந்த நிலையும்
அணிலொன்று அடிபட்டால்
ஏக்கத்தோடு நின்
சிந்தை சீர்குலைந்து
நொந்து நூலாகிறாய்
அங்கோர்
காக்கை காயம் பட்டால்
கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை
இளகிய நெஞ்சனும்
இளகுவதில்லை
நீ
அழகுக்கு கொடுக்கும் ஆதரவு
சில உயிர்க்கு கொடுக்க மறுப்பதேன்
அதைத்தான் கேட்கின்றேன்,
அடுத்த மாநிலத்தின்
அவலநிலை கண்டு
அள்ளிக் கொடுக்கின்றோம்
ஆதரவு கரமென்று
உன் அடுத்தத் தெருவில்
தீயின் கோரப்பிடியில்
சிக்கிய உளத்திலேற்பட்ட
ரணத்திற்கேனும்
மருந்தொன்று கொடுத்ததுண்டா
யோசித்துச் சொல்
தானென்ற அகந்தையில்
தன்மானச் சிறைதனில்
அடைபட்ட புழுவாய்
சிறைப்பட்ட வாழ்க்கையை இன்றே
சிதைத்து வெளியேறு
அறிவை விரிவுசெய்
அகண்ட மாக்கு
விசாலப் பார்வையால்
விழுங்கு மக்களை
என்றான் நம் பாட்டன்
பாரதிதாசன்
அதைத்தான் செய்தோமா
அதை செயலாக்கிட முனைந்தோமா
தோழா!
நீர் கானகம் சென்றதுண்டா
சிறு மரக்கூட்டங்கள் கண்டதுண்டா
அடர்ந்த வனத்துள்
படர்ந்தோடும் முனைப்பில்
தனக்கென்ற பாதையில்
பிறன் வழி கொள்ளாதும்
கிளை படர்ந்தோடும் மரங்கள்
அதை பார்த்தால்
விளங்குமே மனிதா
அயலோன் என்பவனிடத்தும்
அன்பை காட்டி
பண்போடு இருக்க
கால் முளைத்ததைத் தவிர
வேர்கொண்ட மரங்களே உணர்த்துகின்றது
பிறரையும் மதித்து வாழ்வது நம்
பிறப்பின் நோக்கம்
பிரபஞ்சத்தின் நோக்கமும்
அதுதான் என்றே
மரங்கள் சொல்வதை
மதியால் உணர்
யாரையும் மதித்து வாழ்
செருவாவிடுதி
சி.செ
❤❤
ReplyDelete👍👍👍 அருமை
ReplyDelete