வடுகப்பட்டியே . . .
கற்பனை சிறகின்
கம்பனைக் கண்டதில்லை
காவியம் போற்றிடும்
இளங்கோவனை கண்டதில்லை
கல்லா மாந்தரிலும்
வில்லாய் சிந்தையூற்றும்
வடுகப்பட்டி வாசனே
தமிழ் கவிபாடும் நேசனே
நான் கண்ட கம்பனும்
இளங்கோவனும் நீயே
வடுகப்பட்டியே...
இலக்கணம் அறியாப் பாட்டாளிக்கும்
இலக்கிய சொலவடைப் புகட்டியவன்
நீ பாடும் பாட்டில்,
பரவிக்கிடந்த மூடத்தையோட்டியவன்
தாய்பாசத்தின் பனிக்கொடியை
பற்றோடு காட்டியவன்
வழக்கொழிந்த வார்த்தைக்கும்
வாக்கப்பட வைத்தவன்
நெறியோடு நடைபோடும்
நதிபோல் தமிழில்
அறம்பாடி குணம்பாடி
அகத்தினை நிறைத்தாய்
வடுகப்பட்டி வளர்த்தாய்
காதல் ரசம் கொட்டவும்
யுத்தயிடி முளக்கமும்
உன் வார்த்தையினூடே
வீரத்தை விதைத்தாய்
இறை பக்தியில்
இழையோடிய கூட்டத்தின் மத்தியில்
" ஊரையெல்லாம் காப்பாத்தும்
தாண்டவக்கோனே
முதலில் உண்டியலை காப்பாத்து
தாண்டவக்கோனே "
என்றே பக்தியோடு
பகுத்தறிவையும் புகட்டியோன் நீ
இன்றுபோல் அன்றொருநாள்
இந்நிலமும் அன்னைத்தமிழும்
உந்தன் தாய்வழி கண்டநாள்
தமிழ்ச் சுவையூரக் கண்டநாள்
அருந்தமிழே
கருநிலவே
உன் படைப்பில் பலவும்
சுவை கண்டேன்,
அது தேன்சுளை
இன்னும்
மிகுதியாய் வாசிக்கத் தமிழ் வேண்டும்
ஆதலால் தமிழே
உன் வரம் வேண்டும்
தமிழ்போல் இளமை கொண்டு
தரணியாள்வாய்
தமிழால் நின்று
என்றும் நீர் வாழ்வாய்
தமிழ்போல் நின்று
வடுகப்பட்டியின்
கருப்பு வைரமே
நீர் வாழ்கவென்றே
வணங்கி வாழ்த்துகின்றேன்
செருவாவிடுதி :
சி. செந்தில்குமார்
Comments
Post a Comment