எங்கே சென்றாய்...

எங்கே சென்றாய்
எங்களை ஏங்கவைத்து நீ
எங்கே சென்றாய்....

உண்ணும் வேளையிலும்
உறங்கும் வேளையிலும்
உன் குரலீட்டி
சிந்தை திருப்புவாயே...
இன்று நீ 
எங்கே சென்றாய்...

சின்னஞ்சிறு வயதில், 
மூன்றே மாதத்தில்
முதிர்ந்த உன் பக்குவத்தின்
முகத்தோற்றமும், குரலும்
கேட்போர் உள்ளம் குலைநடுங்கும்

இன்று கேட்போரால் 
என் குலை நடுங்குகிறதே...
நீ
எங்கே சென்றாய் ...

காலையில் கண்டாலும் 
நான் வெளிசென்று வந்தாலும்
காலை வருடி செல்லமாய் நீ
கடிக்கும் போதிலே
கடுஞ்சொல் வீசுவேன்
உன்மேல்..! ஒருபோதும்
கரம் வீசுவேன் இல்லையே

இருந்தும் நீ
எங்கே சென்றாய்...

நம்வீட்டு கோழியோடும்
விளையாடும் உன்தோழிப் பூனையோடும்

வம்பிடும் உன்னோடு நான்
வழக்கிட்டு வந்தாலும் நீ
விருந்துண்ண மறுப்பதில்லை...
என்றபோதும் 
இன்று நீ
எங்கே சென்றாய்...?

உன்நிலை கண்டபோது
என்பிள்ளை கொண்டநிலை
ஐயகோ.... 
நான் என்சொல்லி 
தேற்றுவதென்று தெரியாது...
கலங்குமென் கண்ணீரும் துடைத்தேன்
அழுகுமென் மகளறியாது

உனக்கோர் பேருவைக்க
என்போல் என்மகளும்
ஆயிரம் பேரைச்சொல்லி
அல்லும்பகலும்
அதுசரியோ இதுசரியோ என்றவள் 
எண்ணியெண்ணி அகமகிழ்ந்தாள்

உனக்கும் பேருவைக்க
அன்று நான் நின்ற நிலையும்
இதுதான் என்மகளே ...
என்றதுனக்கும் தெரியாதோ

தெரிந்து நீயின்று
எங்கே சென்றாய் .....?

சாலையில் போகும்போது
சாடுவார் கல்லெடுத்து
என்று நான் பலநேரம் 
ஓடிவந்து பார்த்ததுண்டு...
உன் குரல் கேட்டபோது

இன்று 
யாரடித்து நீ சென்றாய் ...

மாரடித்து கேட்கிறேனே...! 
எங்கு சென்று நீ தொலைந்தாய் !! 

"வாகனக் கால் பட்டு "
பிரிந்ததாம் உன்னுயிர்
என் மகளின் 
கண்ணீர் வாக்குமூலம் 

சொல்! 
அடிபட்டதுன் சிரமா
இல்லை, 
அன்போடு 
நானிருக்கும் மனச்சிறையா 

சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .