அருக்காணி பாட்டியின் கடை..
அது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழிசெல்லும் நெடுஞ்சாலை. புதுக்கோட்டையில் இருந்து சரியாக 12 வது மையில்கல் தொலைவில். ஒரு சோலைவனம் போல் காட்சி தரும், அந்த அழகான மரங்கள் கூடியிருக்கும் இடத்தில், எப்போதும் ஏதேனும் ஒரு பழவகையை , அது வாழையோ , கொய்யாவோ நாவற்பழமோ வைத்துக் கொண்டு, விற்பனை செய்து கொண்டிருக்கும் அந்த 70 வயது மூதாட்டி. பேரு அருக்காணி
இப்போதெல்லாம் அந்த சாலையை கடந்து செல்வோரில் சிலர் அங்கே வாகனத்தை நிறுத்தி பழங்கள் வாங்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது.
வாடிக்கையாளரின் அதிகரிப்பால் அருக்காணி பாட்டி ஒருநாள் கூட, கடை வைக்காமல் நிறுத்தியது இல்லை. காரணம் நம்மை நம்பிவருபவர்கள் ஏமாறக் கூடாது என்ற கடமை உணர்வுதான். அதை தொழில் நேர்த்தி என்றும் சொல்லும் பாட்டி.
ஒரு நாள் பாட்டி கடை நடத்திக் கொண்டிருக்கும் போது அந்த வழியே பள்ளிக்கூடம் போகும் பவுனுத்தாயி சிரித்த முகத்தோடு வந்தாள். வந்தவள் பத்துரூபாய் பணத்தை பாட்டியின் மடியில் போட்டுவிட்டு, நாவற் பழத்தை எடுத்து ருசிக்கலானாள். கூடவே புத்தகத்தையும் விரித்து படிக்கலானாள். பணங்கொடுத்து வாங்கினாலும் பாட்டியின் பேத்தியிவள்.
" என்னடி ஆத்தா ஒரு வாரமா காங்களையே உன்னெ... என்னவாம் சேதி..."
" அது ஒண்ணும் இல்லை ஆத்தா
கடைகன்னிக்கு போறது இல்லை... சும்மாதான் இருந்தேன்....,
இனி பள்ளிக்கூடம் தொடங்கியாச்சுல....
இனி எப்பவும் பாக்கலாம் விடு " என்று சொல்லும் போதே ஒருவாகனம் மெல்ல பாட்டியிடம் நிறுத்தி. " நாவற்பழம் எவ்வளவு ரூபாய் பாட்டி " என்றபோது.
"பத்துரூபா கொடு அப்பென்" னு சொன்னதும். அவரும் பணத்தை கொடுத்து ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
யாரேனும் கொடுத்த பணத்திற்குமேல் கொசுரு கேட்பார்களேயானால் பாட்டி சொல்லும் ஒத்த சொல்லுக்கு. எழுதி வைக்கலாம் நம்ம சொத்தை
" எடுத்துக்க ஆத்தா
உனக்கா இல்லெனுவே "
என்று நெய்யாக உருகும் அப்படி ஒரு குணம் பாட்டிக்கு.
" பழம் வாங்குவோர் சொல்வார்; பாட்டிக்கிட்டே வாங்கினாத்தான் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் தின்பார்கள் என்று.
பாட்டி சொல்லும்;
" இதெல்லாம் நம்ம நாட்டு பழவகை தங்கம்.., அது கசந்தும் போகாது,விசமுன்னு ஆகாது... உடலுக்கும் நல்லது. பயமில்லாமெ வாங்கி கொடு அப்பென்...
ஒருநாள் பவுனுத்தாயி கேட்டாள்.
" ஏம்பாட்டி உனக்கு வாடிக்கையாளர் மேலெ இத்தனை அக்கரை" என்று
" வாங்கினவுக நல்லா இருந்தாத்தான் விக்கிற எனக்கும் சுகப்படுண்டி ஆத்தா, அட ஒண்ணுமில்லை, நான் செத்த பொறவு ஒரு பத்துநாள் நெனப்பாச்சும் இருக்குமுள்ள அவுகளுக்கு....
அதுக்கு தாண்டியம்மா இத்தனை கரிசனமும்..." என்றதை கேட்டதும் கண்ணீர் சுரந்தது பவுனுத்தாயிக்கு.
" என்னம்மா பாட்டி எங்கே " என்ற கேள்வியோடு நின்றது ஒரு வாடிக்கையாளர் வாகனம்.
"பாட்டிக்கு தலைவலியாம் அண்ணே... அதுதான் என்னைய கடையப் பாத்துக்கச் சொல்லிட்டு போயிடுச்சு ... " என்றாள்.
இந்த வார்த்தையை எத்தனை பேரிடம் எத்தனை முறை சொன்னாளோ என்னவோ, இப்போது அந்த வார்த்தையின் அடுக்குகளைப்போல் வளர்ந்து இருந்தாள் பவுனுத்தாயும்.
அந்த மாலைப்பொழுது கடையை முடிக்கும் போது நினைத்துக்கொண்டாள் . போகுற வழியில் அருக்காணி பாட்டி சமாதிக்கு இன்றைக்கு விளக்கு போட்டுட்டு போகனும்....
நீ மண்ணெவிட்டு மறைஞ்சு வருசம் மூனாச்சு. உன்னோட நினைவை எத்தனை வருசம் முடியுமோ அத்தனை வருசமும் எடுத்துச் சொல்வேன் .உன் நினைவு என்னைவிட்டு நீங்கும்வரை...
சி.செ
Comments
Post a Comment