முகவரி
இருளுக்கும் எனக்கும்
இருக்கும் இறுக்கம்
ஒரு பாறைக்குள்
அடைபட்டத்
தேரையின் நிலையிருக்கும்
உண்டது கூட
உண்டியில் கிடக்க மறுக்கும் - விழி
கண்டதும் கூட
கனத்தப் பெரும் இருளாயிருக்கும்
ஆயிரம் வண்ணம் பூசினாலும்
அன்றைய இருள்மட்டும்
இருளாகவே இருக்கும்
இதயம் கூட இடிப்பதை
இன்னும் அதிகப் படுத்தும்
காலை உதயம் கூட
எனக்கு உருமாறியேத் தொலைக்கும்
என் உள்ளம் அறிந்து
ஓருயிர் பலிகூட செய்தறியேன்
ஏற்றப் பணியில் இதை
எங்ஙனம் மறுப்பதறிவேன்
கொடியில் காய்ந்திடும் துணியைப்போல்
உயிரை வதைப்பது சரியோ
தூக்கு விதிக்கப்பட்டோரை
தூக்கிலிடும் தொழிலாளி என்னால்
எத்தனை உயிர்
தன்னிலை மாறி
அந்தரத் தொங்கியிருக்குமோ
அன்று என்னையும் ஒருமுறை
தூக்கிலிட்டுதான் சென்றது
இருவிழியின் இறுதிப்பார்வை
உண்மையில் உனக்குமா
உண்மை புரியவில்லை
என்றவன் விழியின் மொழி கண்டபோதுதான்
செய்யும் குற்றத்தின்
பாரம் மொத்தமும்
என் தலைக்கேறி கனத்ததும்
உண்மையில் அன்று
கருப்பு கவசமிட்டது
அவன் முகத்திற்கு மட்டுமல்ல
உண்மையை தேடியும்
கிடைத்தறிய முடியா
அந்த உண்மை முகவரிக்கும் தான்
செந்தில் சுலோ
Comments
Post a Comment