தமிழோடு வேண்டுவேன் என்றே கொட்டு முரசே!
கொடுத்துதவும் பண்பு
தமிழர்கது வென்றும் தெம்பு
இது அன்று,
இன்று
கொடுப்பது மறந்தார்
எடுப்பதால் நிறைந்தார் - அதில்
உன்னையும் சாட்சியாய் புனைந்தார்
பண்பாடு மறந்த
பாதகர் நெஞ்சில்
பகைமை போற்றும் பண்பில்லார் தனில்
நீதியின் எதிரே
நில்லென்ற சொல்லால்
தீமைக்கு உம்மை
சாட்சியாய் வைப்பார்
தமிழே
தீமைக்கு உம்மை
சாட்சியாய் வைப்பார்
மயக்கமேன்
தமிழே!
உனக்கும் தயக்கமேன்
குற்றமும் புலமையாய் கண்டு
புன்னகை மாற்றவும் மறந்து
காகித மடிப்பில் நீர்
மறுதலித்து நின்றாயோ -
தமிழே!!
குற்றம் அரங்கேற - நெஞ்சம்
குறுகுறுத்து நின்றாயோ
உன்னுள்
தேன்தமிழ் சாரமும்
தீஞ்சொல் வீரமும்
உண்டென அறிவேன்
என்றே கொட்டு முரசே !!
தமிழே !!
சுயமாய் நீயும் எழுந்து
சுட்டெரிக்கக் கூடாதோ
வஞ்சகம் நெஞ்சுடைய
நெஞ்சகம் சுட்டெரிக்கக் கூடாதோ
ஆளுமை அதிகாரம் அதுவும்
அடி பிரளக்கூடாதோ
தமிழே ,
உன் கரம் பட்டால்
உயிர்த்தெழுவோம் நாங்கள்
என்றே கொட்டு முரசே
தன்னுடல் தேய
வாசம் தரும் சந்தனமும்
தன்னுள் சொல்லால்
தன்னை உயர்த்தும் தமிழும்
தரத்தில் ஒன்றென்பேன் -
தமிழதன் குணத்தில் மேலென்பேன்
நீயதை கொட்டு முரசே !!
எட்டுத்திக்கும் கொட்டும் முரசே
எங்கள் தமிழே
உயிரென்று கொட்டும் முரசே
எங்கள் உயிரே
தமிழென்று கொட்டும் முரசே
நான் தமிழே தமிழே
என்று கூவியழைத்தது
என் தாய் தமிழை மட்டுமல்ல
கவிப்பெரும்தகையோரே
உங்கள் அத்துனை
பெயரையும் தான்
என்றே கொட்டு முரசே !
என்றே கொட்டு முரசே !
செருவாவிடுதி
சி.செ
( நிலாமுற்றத்தில்
என் முதல் கவியரங்கம்,
கும்பகோணம் சுவாமிமலையில்
2 ஆம் ஆண்டுவிழாவில்...)
Comments
Post a Comment