சந்தர்ப்ப சகுணம்

ஊரேக் கொண்டாடும்
காவடியாட்டமும்
பொய்க்கால் குதிரையும்
பால் குடமும்
பார்க்க மட்டுமே நம் கூட்டம்

அதில் கூடினால்
ஏனிந்த வேலை
உன் வேலையைப்பார் என்பார்

எகத்தாளத்தோடும்
ஏழெட்டு பேரோடும்

தேங்காய் உரிக்கும் இடம்
தோட்ட வேலையிடம்

நம்மைக் கண்டால் ! 

இது என்ன
சிரைப்பதென்றா நினைத்தாய்
என்பான்

இதுயென்ன
அத்தனை இழிவானதா

இல்லை 
இதைவிடுத்து 
வேறெதுவும் நம்மால்
இயலாததா

இது மட்டுமல்ல

உரிமை என்பார்
உதாசினப் படுத்துவார்

ஓடாய்த் தேய்ந்து 
உரு மாறினாலும்

ஒரு வார்த்தையில் கூட
வெகுமதி இராது

இதை 
எப்போதாவது
யோசித்தாயா ?

இல்லை
யோசனை மறந்தாயா ?

அட்சதைக்கு 
அகத்திக் கொடுப்பதும்
உன் வேலை

நளுங்கு வைத்து
கங்கணம் கலைவது நீ

ஒரு பயணத்தின் நடுவே
உன்னைப் பார்த்தால்

சகுணப் பிழையென்பார்
பயணம் தடையிடுவார்

அறிவார்ந்தோர்!
அறிவாயோ ?

உன் இழிவுக்கு 
நீயேக் காரணம்

உன் 
உயர்வுக்கு !!! 

யோசிக்கத் தொடங்கிவிட்டாய்
மகிழ்ச்சி

நம்
உறவுக்கு
இதுதான் வளர்ச்சி

திருமணச் சடங்கு
திருவிழாத் திடலில் முடிமழிப்பு

அந்திமறக்கொட்டல்
இடுகாட்டுச் சதுக்கத்திலும்
இழிவுக்கு பஞ்சமில்லை

மாண்ட பூதவுடலை
மகன் கூடத் தொடுவதில்லை

மூக்குத்திக் கடுக்கனும்
அரணாக்கயறும்
அலுப்பின்றி 
தொட்டறுப்பாய்

அதிகாரம் உள்ளவர்
எட்டியேயேயேயே . . . .
நிற்பார்

அதட்டலும்
கூட்டத்தில்
ஏதோவோர் மூலையில்

உன் சாதியென்றே
அதையே கூவலிடுவான்

முறைக்கவும் வழியின்றி
வாய்மூடி திட்டினாய் போலும்

உன் முதுகு புறத்தில்
பறக்குது அனல்

கூலிக்கு 
நிற்பாய்

அதிலும் 
குறைகூறல் கூடாது

தரை பார்த்தே
நிற்பாய்.  . . .

போ போ பார்க்கலாம்
என்பார்

எதற்கு இந்த
தரங்கெட்ட வேலை

உன் கூலியை 
நீயே நிர்ணயித்துச் சொல்

இல்லை எனில்
நிறுத்திக் கொள்

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .