மீண்டும் நான் காதலிக்கிறேன்
வாழ்க்கையெனும்
பேரிருள் கூட்டின் உள்ளே ஓர்
இன்னலின் இடிபாட்டில்
இன்பமிழந்து சிக்குண்ட யான்
சிற்றின்ப ஈசலாய்
சிறகு விரித்தேன், பின்
சிக்கல்களில் மீண்டு வந்து
மீண்டும் நான் காதலிக்கிறேன்
இல்லாத விசமத்தில் - பதில்
இல்லாத கேள்வியில்
இல்லாளே - என்
இம்சைக்கு ஆளானவளே
அந்நினைவை மனந்துடைத்து
மீண்டும் நான் காதலிக்கிறேன்
கண்ணாடி பார்த்தே
முகத்தில் உருவான பருக்களை
உச்சி கொட்டி நொந்தவளே....
என்னுதிரம் சுமந்து நீ
மெய்தளர்ந்த போதிலும்
தன்மேனி எண்ணி நொந்ததில்லை
அதை எண்ணி எண்ணி
மனம் வியந்து வியந்து
பேதலித்தேன்,
பேதையுன்னை காதலித்தேன்
மீண்டும் நான் காதலிக்கிறேன்
நான் தலைவலி என்றாலும்
கடும் சுரத்தோடு நின்றாலும்
பெரும் நோம்பிருந்து
காப்பதேயுன் கடமை என்பாய்
உன்னுடல் நோவென்றாலும்
உள்ளத்துள் ரண மென்றாலும்
ஒரு வார்த்தை கூட
கேட்டதில்லை - ஆறுதலாய்
ஒரு வார்த்தையும் நான் சொன்னதில்லை...
அதை நினைத்து வருந்தி
மீண்டும் நான் காதலிக்கிறேன்
பிள்ளையோடு உன் கோபம்
பிறை நிலவாய்
தேயும் வளரும்
சிற்சில நேரம்
கடுஞ் சொல்லாகியும் போகும்
யாரை நோவது நான்
என் வசவுக்கு நீயே பலியாவதும்
நித்தம் நடக்கும்
சந்தம் இதுவாகி போகும்
ஆதலால்!
மீண்டும் நான் காதலிக்கிறேன்
கோபத்தில் சிலநேரம்
உணவதை மறுத்தால்
பிரியசகியே
மருந்தாகுமே உன் தேகம்
எனை
மனம் வருத்தாதிருத்தும்
மாயவளே
அதை மனதிருத்தி நான்
மீண்டும்!
உன்னை காதலிக்கிறேன்
எல்லை கடந்த வாதத்தில்
நெறிமறந்த உன் சோதரனையும்
கரம்பற்றிய எனக்காக
புறம் போகச் சொன்னவளே
அன்றென்னை மறந்தேன் நான்
மீண்டும்!
உன்னை காதலிக்கின்றேன்
எழுதுமென் எழுத்திலும்
பிழைநேரக் கூடாதென்று
என் சிந்தையோடு
நித்தம் கண்ணுற்றும்
என்சித்தம் முன்னேற்றும்
விந்தை பெண்ணரசியே
மீண்டும்!
உன்னை காதலிக்கின்றேன்
காவியம் என்றாலும் - அழகு
ஓவியம் என்றாலும் - என்
திரவியமே
என்றும் நான்
உன்னோடிருத்தல் வேண்டி
மீண்டும்!
உன்னை காதலிக்க வேண்டும்
என் இறுதி மூச்சும்
நாசி பிரியும் வேளைவரையும்
நாயகியே!
உன் திருக்கரம் பட்டு நான்
உயிர்த்திட வேண்டும்
நான்
மீண்டும்
மீண்டும்
உன்னை காதலிக்க வேண்டும்
அதற்காகவே . . .
மீண்டும்!
உன்னை காதலிக்கின்றேன்
செருவாவிடுதி :
சி.செ
Comments
Post a Comment