சிறகுகள் விரித்திடு

எடுத்தது எல்லாம்
தடுக்கி வீழின்
அடுத்தது கூட 
கை எடுத்திட மறுக்கும்

இப்படியே நித்தம்
பித்தம் கொண்டால், 
இளமையும் கூட
சித்தம் மறக்கும்....

திறக்கும் கதவைக் கூட
கண் திறந்து பாராது

நீ அழுத்தம் கொண்டு
அடிமை என்ற எண்ணம் கொண்டு

உள்ளம் இருண்ட 
நிலையில் நீ இருந்தால் 

வெள்ளம் நிறைந்த இடங் கூட
வெறும் பள்ளம் என்றே தோன்றும்

சொல்லும் பொருளை 
செவி மடுக்காவிடில், 
செய்யும் செயலில் 
மனம் இணையாவிடில், 
இசையோடு வரும் கீதமும் கூட
வசையேந்தி வரும் நிலையே தரும்...

கிளையில் ஆடும் 
கொடியும் மெல்ல 
பிடியை தேடி அலையும்...

நீ
அறிவில் சிறந்தும்
ஆளுமை பொதிந்தும் - தன் 
நிலையை மறந்தும் திரிந்தால்
உன்னால்
நானிலம் எப்படி விளங்கும்

கேள்
மெல்ல வீசும் காற்றின் சுகத்தில் - நீ
மேனி சிலிர்த்து 
மெய்மறந்தது போதும்

உனை தள்ள நினைக்கும் 
காலத்தின் கரத்தை 
எண்ணித் தொடங்கு
நடை பாதையும் ஏணியாய் மாறும்

அட 
சிகரமென்ன சிகரம்
நீ சிறகை விரித்து பறந்தால்
அதுவும் கூட சுருங்கும் 

சி. செ

Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை