பிழை
யாரைச் சொல்லி நோவது
யாரால் வந்த நோயிது
இயற்கையின் படைப்பின்
தோற்றம் எல்லாம்
சரி நிகரென்றால் - எம்
உளத்தை உரமோடு வைத்து
மேனியில் குறைவைத்தது
என்ன நியாயம்
பத்துபேர் மத்தியில்
பசுமையாய் நின்றபோதும் - என்மேல்
பரிதாபப் பார்வையேன்...
கனிகளின் சுவையும்
கருங்குயிலின் இசையும்
படைத்தது இறைவனென்றே
அதைப் பார்த்துப் பார்த்து
வியந்திருப்பார்
ஓடும் நீரிலும்
நீரோடிக்குதிக்கும் கயல்தனையும்
மேயும் புள்ளினமும்
இசையும் வண்டினமும்
இயற்கையின் கொடையென்பார்
சிறப்பாய் படைத்தது இறைவனென்பார்
அதை எண்ணி யெண்ணி
வியந்திருப்பார்
என்
சிந்தையிலும்
சிகரம் தொடும்
முனைப்பு உள்ளதறியாத மூடர்கள் . . .
அங்கோர்
தடைபோடவே நின்றிடுவார்
இறைவனோ
இயற்கையோ
அவர் படைப்பில்
நல்லதைப் போற்றும் அறிவிலி
அல்லாததை தூற்ற மறப்பதேன் உளம் அஞ்சி மறுப்பதேன்
இத்தனைக் குறையோடு
சுயமற்றென்னை படைத்தோன்
இறைவனென்றால்
சத்தியம் சொல்வேன்
நித்தமும் . . .
அவன்பேர் நித்திப்பேன்
என்நெஞ்சத்து உரத்தோடு
உலகில் நானும்
வாகைசூடுவேன்
செருவாவிடுதி :
சி.செ
Comments
Post a Comment