பித்து யாருக்கு...?
இயற்கை எழில்கொஞ்சுமோர்
ஆற்றங்கரை யோரத்தில்
இடைதரிக்கும் ஆடையும்
நெறிமறந்தோர் கோலத்தில்
நடந்தாள்
நல் மனமில்லா
நங்கையவள்
நளினமில்லா நடையிடையில்
கண்ணுற்றோர்,
எத்திப் பிழைக்கும்
தத்துக் குணமும்
இரவல் வாங்கி
பகட்டுடையில்
காலமறியா
காமுகர் கூட்டம் - பொழுதும்
காரிருள் சூழ
காத்திருந்த வல்லூராய்
இரையாக்கிடத் தூக்கினான்
விதிமறந்த ரதியிவளை...
இரவும் பகலும்
இயல்போடு மாறும்
இயல்பை மறந்தவளின்
உடலோ
சொல்லாது
கொள்ளாது
மெல்லெனவே வளரும்
வஞ்சம் அறியாதப் பேதை
நெஞ்சம் நிறையாத வேளை
பிறந்தது பிள்ளை
உடலெல்லாம் ரணப்போர்வை
உணர்வில்லா யிவள் பார்வை
பேணும் தாய்மையும்
புரியாத் தோரணையில்
விலகியொதுங்க . . .
விலக மறுத்ததுயிர் கொடி
கை கால்
விசும்பும் சிசுவின்
முணங்கும் குரலும்
இனமறிய வழியில்லை . . .
நங்கைக்கு . . .
வெறுமை கொண்டே,
இணைந்தக் கொடியும்
தொட்டறுத்தாள்
கை தொட்ட பிசுபிசுப்பும்
துடைத்து ஒதுங்கினாள்
தூரமாக. . .
ஓலமிடும்
கூக்குரலும்
ஒத்தையடிப் பாதையிலெங்கோ
நெடுந்தூரத்தில்
கேட்க...
நடந்தாள் . . .
நடந்தாள் . . .
விதி மறந்தவள்
வேதனையுடன் !
வேறொன்றும் அறியாதவள்... !!
ஆங்கோ...
பாவம்
பசியோடு அழுகிறது
பச்சிளம் பிள்ளை . . .
இயற்கை கேட்கிறது
மனப் பித்தா
யாருக்கு . . .!!?
செருவாவிடுதி :
சி.செ
Comments
Post a Comment